உலக சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இந்த போட்டி நியூலேண்ட்ஸ் மைதானத்தில் மாலை 6.30க்கு தொடங்குகிறது. அரையிறுதியில் இந்தியாவை வென்ற ஆஸ்திரேலியாவும், இங்கிலாந்தை வீழ்த்திய தென் ஆப்ரிக்காவும் இறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளன.
இந்திய நேரப்படி இன்று மாலை தொடங்கும் பைனலில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியோ தொடர்ந்து 7வது முறையாக பைனலில் களம் காண்கிறது. இதுவரை நடந்த 7 உலக கோப்பைகளில் 5 கோப்பைகளை ஆஸி. வென்றுள்ளது.
இன்றைய போட்டியில் வென்றால் ஆஸி. தொடர்ந்து 3வது முறையாக கோப்பையை முத்தமிட்டு ஹாட்ரிக் சாதனை படைக்கும். அதற்கேற்ப லீக் சுற்று முதல் சிறப்பான ஆட்டத்தை ஆஸி. வெளிப்படுத்தி வருகிறது.
லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வென்று ஏ பிரிவில் முதல் இடத்தை பிடித்தது. அதனால் 6வது முறையாக உலக கோப்பையை வெல்லும் முனைப்புடன் மெக் லான்னிங் தலைமையிலான ஆஸி. அணி களமிறங்குகிறது.
அதே சமயம், சொந்த மண்ணில் நடக்கும் தொடரில் பைனலுக்கு முன்னேறியுள்ள தென் ஆப்ரிக்கா, சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதனை படைக்கும் உறுதியுடன் உள்ளது. அந்த அணி முதல் முறையாக பைனலில் விளையாட இருக்கிறது.
லீக் சுற்றில் ஒரு ஆட்டத்தில் கூட தோற்காத வலுவான இங்கிலாந்து அணியை அரையிறுதியில் வீழ்த்தியதும் தென் ஆப்ரிக்காவுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்துள்ளது.
சர்வதேச டி20ல் இரு அணிகளும் 6 முறை மோதியுள்ளதில் ஆஸி. 6-0 என ஆதிக்கம் செலுத்தியுள்ளது. இந்த 6 போட்டியுமே உலக கோப்பை தொடர்களில் நடந்தவை. இருதரப்பு தொடரில் இந்த அணிகள் இதுவரை மோதியதில்லை. ஆண்கள், மகளிர் உலக கோப்பை தொடர்களில் இதுவரை சாதிக்காத தென் ஆப்ரிக்கா, இம்முறை சொந்த மண்ணில் சாதிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவை தவிர இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணிகள் தலா ஒரு முறை உலக கோப்பையை வசப்படுத்தியுள்ளன. இதுவரை நடந்த 7 உலக கோப்பைகளில் ஆஸி. 5 முறை சாம்பியன், 1 முறை 2வது இடம், 1 முறை அரையிறுதி என அசத்தியுள்ளது. தென் ஆப்ரிக்கா இதற்கு முன் 2 முறை அரையிறுதி வரை முன்னேறியதே அதிகபட்ச சாதனை. மற்ற 5 முறையும் லீக் சுற்றுடன் வெளியேறி உள்ளது.